செம்மொழி ஆய்வு வளர்ச்சியில் பேராசிரியர் சி. இலக்குவனாரின் பங்களிப்பு-பகுதி-3

பேராசிரியர் காலத்தில் கிடைத்த சான்றுகளைக் காட்டிலும் மிகுதியான சான்றுகள் இப்போது கிடைத்துள்ளன.  சிந்துவெளி எழுத்துகள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மண்பாண்டச் சில்லுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி தமிழர்கள் வந்தேறிகள் அல்லர் என்பதை வலியுறுத்துகின்றன.  நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள செம்பியன் கண்டியூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள புதிய கற்காலக் கற்கோடரியில் தமிழ் எழுத்துகள் காணப்படுவதாகக் கிடைத்த செய்தி தமிழ் எழுத்துகளின் தொன்மையையும் பழந்தமிழரின் கல்வியறிவையும் பாருக்குப் பறைசாற்றும் என்பதில் ஐயமில்லை.

புதிய கற்காலத்திலேயே தமிழர்க்குத் தனித்த எழுத்துமுறை இருந்தது என்னும் செய்தி இந்தியாவில் தொன்மைவாய்ந்த எழுத்துமுறை தமிழருடையதே என்பதையும் கடன் கொடுக்கும் உயர்நிலையிலேயே தமிழ் இருந்தமையையும் வலியுறுத்துகிறது.

‘இன்று இந்தியர் நாகரிகம் என்று அழைக்கப்படுவதில் பெரும்பகுதி பழந்தமிழர் நாகரிகமேயாகும்’ (மே.ப. ப.210) என்னும் பேராசிரியரின் முடிபு உண்மை;வெறும் புகழ்ச்சியன்று.

தமிழ்மொழியின் எழுத்துமுறை, இலக்கியவளம், சொல்லாட்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பேராசிரியர் பழந்தமிழ் மாட்சியையும் தமிழர்தம்நாகரிகத் தொன்மையையும் பற்றிய தரவுகளைத் தொகுத்துரைக்கிறார்.  காலப் போக்கில் கிடைக்கும் வரலாற்றுச் சான்றுகள் அவரது கூற்றை வலியுறுத்தும் வகையில் விளங்குவது குறிப்பிடத் தக்கதாகும்.

தொல்காப்பியம் ஒர் அறிவுக்கருவூலம் என்பதனைத் தமது தொடர்ந்த ஆய்வுகள் மூலம் விளக்கிவந்த பேராசிரியர் எழுத்து, சொல் ஆகிய இரு படலங்களையும் ‘மொழி அறிவியல்’ (Science of Language) எனவும், பொருள் படலத்தை இலக்கிய அறிவியல் (Science of Literature) என்றும் குறிப்பிடுவது தொலைநோக்குச் சிந்தனை மிக்க அவரது ஆய்வுமுதிர்ச்சிக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாகும்.  1957-ஆம் ஆண்டு வெளிவந்த அவரது ‘தமிழ்மொழியில் உரிச்சொற்களும் இடைச்சொற்களும்’ (Semantemes and Morphemes of Tamil Language) என்னும் ஆங்கில ஆய்வுநூலில் இக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் (p. 132).

பல்துறைசார் அணுகுமுறை இந்தியாவில் எழுச்சி பெறும் முன்னரே பேராசிரியர் வழங்கிய ‘இலக்கிய அறிவியல்’ எனும் இத்தொடர் இன்றும் புதுமைப் பண்புடன் பொலிவதைக் காணும்போது பேராசிரியரின் தொலைநோக்கு மிக்க ஆய்வுநெறிமுறை இன்றைய ஆய்வாளர்க்கு ஒரு வழிகாட்டி என்பதில் ஐயமில்லை.

தொடரியல் அமைப்பு, சொற்களின் வளர்ச்சி, சொல்லாக்கம், வாக்கியக் கட்டமைப்பு ஆகியவற்றில் திராவிட மொழிகள் ஒற்றுமையுடையவாகச் செயற்படுவதை ஆழ்ந்தறிந்த பேராசிரியர், தமிழ் இலக்கண அமைப்பில் இவற்றை ஆயும் முனைப்புடன் இந்த ஆங்கில ஆய்வுநூலை வழங்கியுள்ளார்.  ‘தமிழ்மொழியில் உரிச்சொற்களும் இடைச்சொற்களும்’ (Semantemes and Morphemes of Tamil Language)எனும் தலைப்பிலமைந்த இந்நூல் ஒன்பது இயல்களைக் கொண்டமைந்துள்ளது.

முன்னுரையாக அமைந்த முதல் இயலில் தமிழ்ச்சொற்களின் சந்தநயம், சொற்கோவையின் செழுமை, கருத்துச்செறிவு, தமிழின் தொன்மை, உலகமொழிகளுள் அதன் தனிச் சிறப்பு ஆகியவற்றை விளக்கித் தொல்காப்பியத்தின் நூலமைப்பையும் அதன்வழித் துலக்கமாகும் தமிழின் செம்மொழிக்கூறுகளையும் குறித்துக் கூறியுள்ளார்.  தொல்காப்பியத்தின் முதலிரு படலங்களையும் (எழுத்து, சொல்) மொழி அறிவியல் (Science of Language) எனக் கருதும் பேராசிரியர், பொருட்படலத்தை இலக்கிய அறிவியல் (Science of Literature) எனப் பெருமிதத்துடன் அறிமுகப்படுத்துகிறார்.

மொழியும் இலக்கியமும் அடிப்படையில் ஒன்றுடன் ஒன்று இயைந்து இயங்குவன என்பது பேராசிரியர் கருத்து.  பேச்சு இலக்கியவடிவம் கொள்கிறது.  இலக்கியம் உருவாகியபின் அவ்விலக்கியம் பேச்சில் தனது தாக்கத்தை நிலைநிறுத்துகிறது.  வழுவும் பிழையும் அறிந்து, நீக்கிக் கொள்ளத் துணைநல்குகிறது.  இலக்கியம் உருவாகும் வாய்ப்பற்ற பேச்சுமொழிகள் நாளுக்குநாள் உருமாற்றம் அடைந்து சிதைந்து போய்விடும்.

மொழியின் கனிந்த படைப்பே இலக்கியம். மொழியை மேலும் வளமும் உரமும் மிக்கதாகச் செய்வதும் இலக்கியமே. ஏட்டிலக்கியத்தின் நலமிக்க தாக்குரவு இல்லையெனில் பேச்சுமொழி விரைவில் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து அழிந்துவிடும் என்பது பேராசிரியர் முடிபு. இதனை நன்குணர்ந்தமையினாலேயே தொல்காப்பியர் எழுத்து சொல்லுடன் அமைந்துவிடாமல் பொருள் இலக்கணத்தையும் எடுத்துக்கூறி, இலக்கியத்தின் அடிக்கருத்துகள், இலக்கிய வடிவங்கள் ஆகியவற்றைத்

தமது பொருட்படலத்தின் மூலம் ஒன்பது இயல்களில் விரிவுற விளக்கியுள்ளார் எனப் பேராசிரியர் கருத்துரைக்கிறார்.

செம்பியன்கண்டியூரில் கிடைத்துள்ள புதிய கற்காலக் கற்கோடரியின்மீது அமைந்துள்ள தமிழ் எழுத்துகள், உலகமொழிகளில் மிக முற்பட்ட காலத்திலேயே தமிழ் எழுத்து வடிவம் பெற்றிருந்தது என இந்நூலின் முன்னுரையில் கூறும் பேராசிரியரின் கருத்துக்கு அரண் சேர்க்கும் வகையிலமைந்துள்ளன.

மொழியியலறிஞர் வென்றியே இயற்றிய ‘மொழி’என்னும் நூலே தமது ஆய்வுக்கு வழியமைத்ததாகவும் அவரது மொழிக்கோட்பாடுகள் தொல்காப்பியர் காட்டும் இலக்கணக்கோட்பாடுகளை ஒத்துவிளங்குவதால் தமிழின் உரிச்சொற்களையும் இடைச்சொற்களையும் ஆய்வதே தம் நூலின் நோக்கமெனவும் பேராசிரியர் குறிப்பிடுகிறார்(p. xiv). தமது ஆய்வு வரலாற்று- நிலையும் பயன்பாட்டுநிலையும் கொண்டமைந்துள்ளதாக அவர் தெரிவிக்கிறார். தொன்மைக்காலத்தமிழிற்குத் தொல்காப்பியத்தையும், இடைக்காலத்தமிழுக்குப் பவணந்தியாரின் நன்னூலையும், அண்மைக் காலத்திற்குப் பத்தொன்பது-இருபதாம் நூற்றாண்டு நூல்களுள் சிலவற்றை யும் எடுத்துக்கொண்டதாகவும் அவர் கூறுவது வரலாற்றிலக்கணப்போக்கில் அவர் காட்டிய ஈடுபாட்டுக்குச் சான்றாக விளங்குகிறது.

இரண்டாம் இயலில் இடைச்சொகள், உரிச்சொற்கள் தொல்காப்பியரால் வரையறை செய்யப்பட்டுள்ளவற்றையும், மொழியில் அவற்றின் பயன்பாடு காலப்போக்கில் அடைந்துள்ள மாற்றங்களையும் விளக்குகிறார். அடுத்த இயலில் இடைச்சொற்களுக்கும் உரிச்சொற்களுக்குமிடையேயான தொடர்புகளையும் விரிவாக விளக்குகிறார். நான்காம் இயலில் உரிச்  சொற்களையும் உருபுகளின் சேர்க்கையால் அவை அடையும் மாற்றங்- களையும் எடுத்துக்காட்டுகளுடன் தொகுத்துரைக்கிறார். ஐந்தாம் இயல், இடைச்சொற்களைப் பற்றிய இலக்கணநூல்களின் வகைப்பாடுகளை விளக்குகிறது. ஏனையஇயல்களைக் காட்டிலும் இவ்வியல் விரிவுமிக்கதாக விளங்கித் திராவிடமொழிகளில் தமிழ் பெற்றுள்ள சிறப்பினை எடுத்துரைக்கிறது. பகுத்தறிவின் அடிப்படையிலான திணைப்பாகுபாடும் மகளிரை உயிரற்ற பொருள்களுடன் வைத்து எண்ணாமல் ஆண்-பெண் சமநிலை பேணுவதும் தமிழின் தனிப்பெரும் சிறப்புகளாகப் பேராசிரியரால் போற்றப்பட்டுள்ளன.

வாக்கிய அமைப்பில் கருத்துவெளிப்பாட்டுக்காகவும், கவிதையில் அசைச் சொற்களாகவும், இனிய இசைநிரப்பும் வகையிலும்பேசுவோரின் உள்ளக்குறிப்பையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த உறுதுணை பயக்கும் வகையிலும். ஒப்புநோக்கும் முறையிலும் இடைச்சொற்கள் அமையுமாற்றை ஆறாம் இயல் கூறுகிறது.

‘இடைச்சொற்கள் தோன்றுமுறையும் வழக்கழிதலும்’ அல்லது ‘இடைச்சொற்களின் தோற்றமும் மறைவும்’ குறித்து எட்டாம் இயல் ஆய்கிறது.

இந் நூலின் முடிவுரையில், ‘ ஒரு நாட்டில், சிறந்தநிலையில் அமையும் இலக்கிய ஆக்கங்களும், எழுத்தாளர்களின் எழுத்துத்திறனும், அந் நாட்டின் பொருள்வளமும், அரசியல் மேலாண்மையும் அந் நாட்டுமொழியை நிறைவுமிக்கதாகவும் உலகளாவிய பெருமைக்குரியதாகவும் ஆக்கிவிடும்’ என்று வென்றியே கூறியதை எடுத்துக்காட்டும் பேராசிரியர் சங்ககாலத்தில் இத்தகைய நிலையே அமைந்ததெனத் தெரிவிக்கிறார்.

முடிவுரையில் பேராசிரியர் தெரிவிக்கும் கருத்துகளுள் மிகவும் முதன்மை வாய்ந்த இரு கருத்துகள் இங்குக் குறிப்பிடப்படவேண்டியனவாகும்.

ஆசுத்திரிக்குகள் அல்லது முண்டாக்களுடனான தொடர்பே இந்தோ-ஆரிய மொழிகளில் பல்வேறு மாற்றங்களை விளைவித்ததாகவும் திராவிடமொழிகள் சமற்கிருதத்தால் தாக்கம் பெற்றுப் பல்வேறு மாற்றங்களடைந்தனவெனினும் இவற்றினால் இந்தோ-ஆரிய மொழிகளில் எத்தகைய மாற்றமும் நிகழ்ந்திலது எனவும் பொருந்தாக் கூற்றுரைப்பாரின் போக்கை வன்மையாக மறுத்துரைக்கிறார், பேராசிரியர். ஆரியர் வருகைக்குமுன்னர் இந்தியா முழுமையும் (தமிழர் வாழ்ந்து வந்தமையின்) தமிழே வழக்கிலிருந்தது. என உறுதிபட உரைக்கிறார். தமது கூற்றுக்கு அரண்செய்யும் வகையில் வரலாற்றறிஞர் மு. ஆரோக்கியசாமியின் கூற்றையும் மேற்கோள் காட்டுகிறார்.

‘திராவிடர்கள் இம் மண்ணின் மைந்தர்கள்; தென்னகத்தைத் தாயகமாகக் கொண்டவர்கள்; இங்கிருந்து இந்தியா முழுமையும் பரவினர்; பின்னர் இந்தியாவுக்கு வெளியேயும் சென்றனர்’ என ஆரோக்கியசாமி கருத்துரைக்கிறார் (Tamil Culture Vol Nos. 3 & 4 – p. 327). ஆரியர் வருகைக்கு முன்னர் தமிழர்கள் இந்தியா முழுமையும் தமது வாழ்விடமாகக் கொண்டிருந்தனர் என்னும் கருத்தை மற்றொரு வரலாற்றறிஞர் கோசு

குறிப்பிட்டுள்ளதையும் சுட்டுகிறார் (Early History of India N.N. Gosh  p.20).

தேவபாடையாகிய சமற்கிருதம் கொடுக்கும் நிலையிலும், தமிழ் ஏற்றுக் கொள்ளும் நிலயிலுமே இருந்துவந்ததாகக் கதையளந்த காலம் மலையேறி விட்டது. பேராசிரியர் சி. இலக்குவனார் காலத்திலேயே சுனிதிகுமார் சாட்டர்சி, இருக்கு வேதத்தில் காணப்படும் திராவிடமொழிச் சொற்களைப் பட்டியலிட்டுரைத்தார். அதன்பின்னர் எமனோ சமற்கிருதத்தில் காணப்படும் திராவிடமொழிகளின் தாக்கத்தை ஆய்ந்துரைத்தார். அண்மையில் இந்தோ-ஆரிய மொழிகளில் காணப்படும் திராவிடமொழிகளின் தாக்கத்தை நிறுவும் வகையில் பல ஆய்வுரைகள் வந்துள. அவற்றுளொன்று உண்மைநிலையை ஓரஞ்சாராதுரைக்கிறது. ‘திராவிட அடித்தளமும் இந்தோ-ஆரிய மொழிகளும்’ என்னும் இக்கட்டுரை மொகந்தி என்னும் அறிஞரால் எழுதப்பட்டது (IJDL -Vol. XXXVII  No.1 – Jan. 2008). இந்தியாவின் நான்கு மொழிக்குழுக்களுள், இந்தோ-ஆரிய மொழிக்குழுவினரும் திராவிடமொழிக் குழுவினரும் இந்தியாவுக்கு வடமேற்குப் பகுதிவழியாக வந்தவர்கள் எனவும் முண்டாமொழிக்குழுவினர் வடகிழக்குப்பகுதி வழி இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் என்றும் அவர்முன்வைக்கும் கருத்து நமக்கு உடன்பாடனதன்று.  எனினும் இவ்வாதத்தை அடிப்படையாகக் கொண்டு, அவர் அடுத்துத் தெரிவிக்கும் கருத்தும், தொகுத்துரைக்கும் சான்றுகளும் நம்மால் ஏற்றுக்கொள்ளத்தக்கனவே.. முண்டா மொழிகளால் திபெத்தோ-பர்மிய மொழிகள் தாக்கம் பெற்றிருப்பதாகவும் இந்தோ-ஆரிய மொழிகள் திராவிட மொழிகளால் தாக்கம் பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார். இரு மொழிக்குடும்பத்தினரும் கலந்துறவாடுவதால் ஏற்படும் அடித்தளச் செல்வாக்கு இந்தோ-ஆரிய மொழிகளில் காணப்படுவதாகவும் உறவுப்பெயர்கள், சில எண்ணுப்பெயர்கள், சில உடலுறுப்புப் பெயர்கள், ஒருசில வினைச்சொற்கள் ஆகியவை திராவிடமொழிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகவும், அசாமிய மொழி, ஒரியமொழி, மைதிலி மொழி, வங்காளமொழி ஆகியவற்றின் எழுத்துமுறை திராவிடமொழிக்குடும்பத்தின் எழுத்துமுறையின் தாக்கம் பெற்றுள்ளதாகவும் அவர் விரிவாக விளக்கியுள்ளார் (IJDL  Jan.2008 pp.1-20). எனவே, இனிமேல் சமற்கிருதத்தை வாரிவழங்கும் ஆண்டையாகவும் திராவிடமொழிகளை இரந்து உயிர்வாழும் அடிமைகளாகவும் கருதிக்கொண்டு ஆயும் போக்கினை ஆய்வாளர்கள் கைவிடவேண்டும்.  செப்பமும் நடுவுநிலையும் போற்றவிழையும் ஆய்வாளர்கள் முந்தைய வழுநிறைந்த கருதுகோள்களைக் கைவிட வேண்டும்.

இந்நூலின் முடிவுரையில் பேராசிரியர் ஒரு புதுமையான வேண்டுகோளை முன்வைக்கிறார். ஆய்வுவளர்ச்சியும், இலக்கிய அறிவும், மொழியியற் புலமையும் மேலோங்கி வளரவேண்டும் என்னும் விழைவே பேராசிரியரின் இவ் வேண்டுகோளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பதை மனத்திற்கொள்ளவேண்டும்.

திராவிடமொழிகளுக்கு ஒரே வரிவடிவம் உருவாக்கிடவேண்டும் எனவும் திராவிடமொழிகளின் தலைமைநிலையிலிருக்கும் தமிழின் வரிவடிவமே இதற்கியைந்ததாக இருக்குமெனவும் பேராசிரியர் கருதுகிறார். தமிழைத் தவிர ஏனைய திரரவிடமொழிகளில் நிலவும் சில வேறுபட்ட ஒலிகளைக் குறிக்க ஒரு சில குறிகளை மட்டும் துணையாகக் கொண்டு, தமிழ் வரிவடிவத்திலேயே அனைத்துத் திராவிடமொழிகளையும் எழுதவும் படிக்கவும் வாய்ப்பினை உருவாக்கினால் ஒப்பிலக்கியம், ஒப்பிலக்கணம், மொழியியல் ஆய்வுகளுக்குப் பெருந்துணை பயக்கும் என்பது பேராசிரியரின் கருத்தாகும். ‘இஃது ஒரு மொழியியல் மாணாக்கனின் நிறைவேறாக் கனவாகிடுமோ அன்றி உண்மையாக மலருமோ,வருங்காலம்தான் முடிவுகூறவேண்டும்” (p. 136) என்கிறார் பேராசிரியர்.

நூலின் நிறைவுரையில், தமிழ், அரசு அலுவகங்களில் ஆட்சிமொழியாகவும் கல்லூரிகளில் பயிற்சிமொழியாகவும் முனைப்புடன் பயன்படுத்தப் பட்டால் தான், தொன்மை மரபு காக்கப்பட்டு ,வருங்கால வளர்ச்சியும் தூண்டப்படும் என்று அறிவுறுத்துகிறார். சிந்தனைக்குரிய கருவியாகத் தமிழ் பல்வேறு அறிவுத்துறைகளிலும் செயற்படவேண்டும். அங்ஙனம் கருத்துத் தொடர்புக் கும் அறிவுவளர்ச்சிக்கும் அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப் பட்டால்தான் தமிழ் வளர்ச்சியடையும் என்று கருத்துரைக்கும் பேராசிரியர்,  இலியனோர்து புளூம்பீல்டு என்னும் மொழியியல் அறிஞரின் பின்வரும் கூற்றை மேற்கோள்காட்டி நூலை நிறைவுசெய்கிறார்.

மனிதனின் சார்பற்ற ஒரு தனிக்கூறாக மொழியைக் கருதுவது முற்றிலும் தவறாகும். மொழியை வழங்குபவர்கள் (அம்மொழியிலேயே சிந்திப்பவர்கள், பேசுபவர்கள்)அனைவரையும் சார்ந்தே மொழியின் வாழ்வும் வளர்ச்சியும் அமைந்துள்ளது. அங்ஙனம் சிந்திப்பவர்கள், பேசுபவர்களின் ஆழ்மன நிலையில் வேர்கொண்டுள்ள மொழி, அவர்களின் பயன்பாட்டினால்தான் மலர்ச்சிபெறும்

நடைமுறை வாழ்வில் எந்தத் துறையிலும் பயன்படுத்தாமல் ஒதுக்கிவைத்து விட்டுப் போற்றிப் புகழ்ந்துரைப்பதால் மட்டும் தமிழ் வளர்ச்சி பெற்றுவிட முடியாது எனத்தமிழர்க்கு அறிவுறுத்துவதே பேராசிரியரின் நோக்கமாகும்.

Posted in Uncategorized | Leave a comment

செம்மொழி ஆய்வு வளர்ச்சியில் பேராசிரியர் சி. இலக்குவனாரின் பங்களிப்பு-பகுதி-2

பழந்தமிழ் நூலில் ‘மலைபடுகடாம்’ தொல்காப்பியத்திற்கு முற்பட்டது என்னும் கருதுகோளைப் பேராசிரியர் முன்மொழிகிறார்.  அதனை அரண்செய்ய அவர் கூறும் சான்றுகளைக் காண்போம். (மே.ப.  ப.37-38).

 1. ‘தொடித்திரி யன்ன தொண்டுபடு திவவின்’ (அடி-21) என்னும் மலைபடுகடாம் பாடலடியில் ஒன்பது என்னும் எண்ணைக் குறிக்கத் தொண்டு என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது.  இச்சொல் தொல்காப்பியர் காலத்தில் வழக்கு வீழ்ந்துவிட்டது.
 2. யானையைப் பழக்கும்போது யானைப்பாகர் வடமொழிச் சொற்களைக் கூறிப் பழக்கியதாக முல்லைப்பாட்டு தெரிவிக்கிறது.  (முல்லை, அடி-35) மலைபடுகடாம் காட்டும் பாகர் இங்ஙனம் வடமொழிச்சொற்கள் வழங்கியதாகக் குறிப்பிடப்படவில்லை.
 3. ஆரியப் பழக்கவழக்க நாகரிகங்களைப் பற்றிய குறிப்பு யாதொன்றும் இந்நூலில் இல்லை.
 4. மூவேந்தர் பற்றிய குறிப்பு யாதொன்றும் இந்நூலுள் காணப்படவில்லை.
 5. திணைநிலங்களைப் பற்றிக் குறிப்பிடுங்கால், தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள திணைநிலக் கடவுள் பற்றியோ ஆரியர் சார்பால் கூறப்பட்ட கடவுள் பற்றியோ எதுவும் கூறப்படவில்லை.
 6. கூத்தராற்றுப்படை எனக் குறிப்பிடப்படாமல் மலைபடுகடாம் என்றே இந்நூல் அழைக்கப்படுகிறது.
 7. ஆசிரியர் பெயர் கோசிகனேயன்றிக் கௌசிகன் அன்று.  கோசிகன் தமிழ்ச்சொல்லே.

தமது கருதுகோளை நிறுவும்வகையில் பேராசிரியர் முன்வைக்கும் தரவுகள் ஐயத்திற்கிடமளிக்கா அகச்சான்றுகளாக விளங்குவதும், செம்மைசான்ற ஆய்வுநெறிமுறையைப் பேராசிரியர் பின்பற்றுவதும் குறிப்பிடத்தக்கன.

அரைநூற்றாண்டுக்கு முன் வெளிவந்த இந்நூல் (1962) இற்றைப் புதுமை வாய்ந்த ஆய்வுநெறிமுறையைப் பின்பற்றுதல் இக்கால ஆய்வாளர் கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

பேராசிரியரின் கருதுகோளை இற்றைத் தொல்லியல் வளர்ச்சி நிலையில் மீள்-ஆய்வு செய்யவேண்டும்.  நூலுள் நுவலப்பட்டுள்ள செய்திகள் பண்பாட்டுமானுடவியல்,  கல்வெட்டியல், தொல்லியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வதற்கு ஒரு தூண்டுகோலாகப் பேராசிரியரின் கருதுகோள் விளங்குகிறது.

செம்மொழி ஆய்வுக்குச் சிறப்பான ஆற்றுப்படையாக, கீழ்க்கண்ட இயல்கள் திகழ்கின்றன எனலாம்:

–          பழந்தமிழ் (ப. 26-42)

–          பழந்தமிழ்ப்புதல்விகள் (ப. 65-95),

–          பழந்தமிழ் இலக்கியம் (ப. 96-116),

–          பழந்தமிழ் நிலை (ப. 117-141),

–          பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள் (ப. 142-157),

–          பழந்தமிழ்ச் சொல்லமைப்பு (ப. 158-173),

–          பழந்தமிழும் தமிழரும் (ப. 174-211)

உலகச்செம்மொழிகளுள் தமிழ் பெறும் உயரிய இடத்தை விளக்கிக் கூறும் பேராசிரியர், சமற்கிருதத்திலிருந்தும் பிராகிருதத்திலிருந்தும் தமிழ் கடன்பெற்றதாகக் கிளப்பப்படும் கட்டுக்கதைகளை வன்மையாக மறுக்கிறார்.   பையுள், கமம், பண்ணத்தி, படிமை ஆகியவற்றைப் பிராகிருதச் சொற்கள் என்று வையாபுரியார் குறிப்பிட்டுள்ளார் (History of Tamil Language and Literature p. 68).  இக்கூற்றை மறுக்கும் வகையில் பின்வரும் கருத்துகளைப் பேராசிரியர் முன்வைக்கிறார்.

 1. பிராகிருதமொழி உருவானது கி. மு. மூன்றாம் நூற்றாண்டில்தான்.  அது செல்வாக்குப் பெற்றது அசோகர் காலத்தில்தான்.
 2. ஆரியமொழி இந்தியாவில் வழங்கத்தொடங்கியது கி. மு. பத்தாம் நூற்றாண்டில்.
 3. அதுவரும் முன் இந்தியா முழுமையும் தமிழே வழக்கிலிருந்தது.
 4. இருக்குவேதத்தில் பல தமிழ்ச்சொற்கள் இடம்பெற்றுள்ளன.
 5. பிரமாணங்களிலும் பல தமிழ்ச்சொற்கள் இடம் பெற்றுள்ளன.
 6. வேதமொழியிலும் சமற்கிருதத்திலும் தமிழ்ச்சொற்கள் இடம் பெற்றுள்ளமை போன்று, பிராகிருதத்திலும் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றிருக்கலாமே.  இந்தப் பார்வையுடன் நோக்காது, பிரகிருதச் சொற்கள் தமிழில் இடம் பெற்றுள்ளதாகக் கூறுவது ஏன்? (மே.ப. ப.150-152).

பேராசிரியர் தொடுத்துரைக்கும் செறிவும் ஆழமும் மிக்க இக்கருத்துகளை ஊன்றிச் சிந்திப்போர் வையாபுரியார் கூற்றின் வழுவும் வடுவும் தெளிவர்.

இந்தோ-ஆரிய மொழி வரலாற்றைத் தொன்மைக்காலம், இடைக்காலம், அண்மைக்காலம் என மூவகையாகப் பிரிப்பர்.  அவற்றுள் பிராகிருதவரலாறு இடைக்காலத்தைச் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  பிராகிருதம் என ஒருமையில் அழைப்பதைக் காட்டிலும் பிராகிருதங்கள் எனப் பன்மையில் அழைப்பது மொழியியலாளர் மரபு.  இந்தியாவுக்கு வந்தேறிய இந்தோ-ஆரியர் பல்வேறு கிளைமொழிகளை வழங்கிய பல்வேறு இனக்குழுவைச் சார்ந்தவர்கள்.  அக்கிளைமொழிகளுள் ஒன்று, இலக்கியத்தரம் பெற்றுச் சமற்கிருதம் என நிலைபெற்றது.  ஏனையவை கிளைமொழிகளாகவே நீடித்தன என்கிறார் அறிஞர்  அனந்தநாராயணர் (International Journal of Dravidian Linguistics,Jan-2005 p.1) அர்த்தமாகதி, சமண மகாராட்டிரி, சமண சௌரசேனி, மகாராட்டிரி, சௌரசேனி, மாகதி, பைசாசி என்பவையே பல்வேறு கிளை- மொழிகளாக வழங்கிவந்த பிராகிருதங்களாகும். வடமொழி இலக்கண நூல்களில் அர்சா என அழைக்கப்பட்ட அர்த்தமாகதி மகத நாட்டின் சரிபாதியிடங்களில் வழங்கியமையின் அப்பெயர் பெற்றது என்பர்.  மகாவீரர் தமது சமயச்சொற்பொழிவுகளை இக்கிளைமொழியில் தான் நிகழ்த்தி-யுள்ளார்.  சுவேதாம்பரச் சமணர்களின் சமயநூல்கள் அர்த்தமாகதியில் இயற்றப்பட்டன.  ஆயின் அவர்களது கதை இலக்கியங்கள் சமணமகா- ராட்டிரியிலேயே இயற்றப்பட்டன.

பிராகிருதங்களுள் விழுமிய மொழி எனத் தண்டி போன்ற புலவர்களால் போற்றப்பட்டது மகாரட்டிரி ஆகும்.  ஆலரின் சத்தசாயி, செயவல்லபரின் வச்சாலக்கா, பல தன்னுணர்வுப் பாடல் தொகுப்புகள், இசைப்பாடலகள் முதலியன இக் கிளைமொழியை இனிமை நிறைந்ததாக விளங்கச் செய்தன.  சௌரசேனி நடுநாட்டையும் மகாராட்டிரி மகாராட்டிரத்தையும் மாகதி கிழக்குப் பகுதியையும் சேர்ந்தவை.  குணாத்தியரின் பிருகத்கதா பைசாசி எனும் கிளைமொழியின் பெருமையுரைக்கும்.  எனினும் அப்படைப்பு நமக்குக் கிட்டாமல் போயிற்று.  அதனைப் பற்றி அறிந்திட சோமதேவரின் கதாசரித்திரசாகர அல்லது சேமேந்திரரின் பிருகத் கதாமஞ்சரி ஆகிய நூல்களில் ஒன்றின் துணைநாட வேண்டியுள்ளது.

இத்துணைக் கிளைமொழிகளுள் எந்தப் பிராகிருதத்தில் மேற்கூறியசொற்கள் காணப்படுகின்றன என்பதை வையாபுரியார் அறுதியிடத் தவறிவிட்டார்.

பேராசிரியர் கூறுவதுபோன்று தொல்காப்பியர் காலத்துக்குப் பிந்தைய மொழியில் ஒரு சொல் காணப்படுமாயின் அச் சொல் தொல்காப்பியத்தின் தாக்கத்தாலும் அங்குச் சென்றிருக்கலாம் என்பதை வையாபுரியார் ஏன் கருதிப்பார்க்கவில்லை? திராவிடமொழிக் கூறுகள் வேதமொழியிலும் பிராகிருதமொழியிலும் செலுத்திய தாக்கங்களை அனந்தநாராயணர் தொகுத்துரைக்கிறார்  (மே.ப. ப.12-13).  இவை எமனோ, கூப்பர் ஆகியோரின் ஆய்வுமுடிவுகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  ‘வட இந்தியமொழிகளே பழந்தமிழும் ஆரியமும் கலந்து உருவானவைகளாக இருக்கும்போது, அவற்றுள் பழந்தமிழ்ச்சொற்கள் காணப்படுவது புதுமையின்று’ (மே.ப. ப.151) என்னும் பேராசிரியர் கூற்றுக்கு அரண்சேர்க்கும்வகையில் அனந்த-நாராயணரின் விளக்கம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திராவிடமொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டோர் தம் கூட்டுறவால் இருக்குவேததில் ஏற்பட்ட இலக்கணமாற்றங்களையும்,  சமற்கிருதத்திலும் பிராகிருதங்களிலும் ஒலியனியல், சந்தி ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களையும் நடுநிலையாகவும் விவரமாகவும் தெரிவித்துள்ள அனந்தநாராயணரின் கட்டுரை ‘எல்லாம் வடக்கேயிருந்து இரவல் பெற்றவையே’ என்பார்தம் மூடநம்பிக்கைகளைக் களைந்தெறியும்.

எனினும் இத்தகைய உண்மைகளை உணரப்பெறா வையாபுரியார் தொல்காப்பியரை மேலும் கடன்பட்டவராகவே காட்ட விழைகிறார்.

தொல்காப்பியத்தில் ‘மொழிமரபு’ இயலில் அமைந்துள்ள இரண்டு நூற்பாக்கள் வரருசி இயற்றிய ‘பிராகிருதப் பிரகாசா’ எனும் இலக்கணநூலில் காணப்படும் இரு நூற்பாக்களின் மொழியாக்கமே என வாதிடுகிறார், வையாபுரியார்.  ‘அகர இகரம் ஐகாரமாகும்’ ‘அகர உகரம் ஔகாரமாகும்’ என்பவை அவ்விரு நூற்பாக்களுமாகும்.  ‘இவற்றுள் காணப்படும் புதுமை என்ன? பிராகிருத நூல்களிலிருந்து கடன்பெற்றுச் சொல்லவேண்டிய இன்றியமையாமை யாது உளது? மொழிவரலாற்றில் ஐயும் ஔவும் ஒலிக்கும் முறையைக் கூறுவதற்கு வேற்றுமொழிநூலின் துணையை நாடவேண்டியது எற்றுக்கு’ (மே.ப. ப.153) என வினவுகிறார் பேராசிரியர்.

இங்கேயும் ‘பிராகிருத பிரகாசா’ நூலிலிருந்துதான் தொல்காப்பியம் பெற்றுள்ளது என வையாபுரியார் கருதுகிறாரே தவிர, தொல்காப்பி- யத்திலிருந்து பிராகிருத பிரகாசா பெற்றிருக்கக்கூடும் என எண்ணிப்பார்க்க மறுக்கிறார்.

பிராகிருத இலக்கண நூலாரைக் கீழைக் குழுவினர் என்றும் மேலைக்குழுவினர் என்றும் இருவகையாகப் பிரிப்பர்.  புருசோத்தமர், கிரமதீச்வரர், இராமசர்மர், மார்க்கண்டேயர் ஆகிய கீழைக்குழுவைச் சேர்ந்தவர்களுள் ஒருவரே வையாபுரியார் குறிப்பிடும் வரருசி என்பது இங்குக் குஇறிப்பிடத் தக்கது.  ஏமச்சந்திரர், சிம்மராசா, திரிவிக்கிரமர், இலக்குமிதாரா ஆகியோர் மேலைக்குழுவைச் சேர்ந்தவர்கள்.   அனைவருள்ளும் காலத்தால் முற்பட்ட சந்தர் இயற்றிப் பாமகரால் உரைவகுக்கப்பட்ட ‘பிராகிருத லட்சணம்’ தொன்மைவாய்ந்த பிராகிருத இலக்கணநூலாகும்.  காலத்தால் முற்பட்ட இந்நூலை விடுத்துத் தொல்காப்பியர் ‘பிராகிருதப்பிரகாசா’ வை மொழிபெயர்க்கக் காரணம் என்ன? அந்த இரண்டு நூற்பாக்களுக்காக வேறொரு மொழியின் இலக்கணநூலை நாடுமளவு தமிழில் இலக்கண வளம் குறைந்திருந்ததா? என்பன போன்ற வினாக்களுக்கு வையாபுரியார் கூற்றில் விளக்கமில்லை.

மேலும் தொல்காப்பியம். எழுத்து, சொல் ஆகிய இரு படலங்களும் மிகச் செம்மையாக, ஒன்றன்பின் ஒன்றாகச் செய்திகள் முறைமைப் படுத்தப்பட்டு நூற்பாக்களின் வரிசைமுறையை மாற்றிச் சிந்திக்கவேண்டிய தேவையின்றிக் கோவைப்பட அமைந்துள்ளன .  கணினியில் செய்தி- நிரல்களை எழுதுவோர் பின்பற்றவேண்டிய முறைமையைத் தொல்காப்பியர் பன்னெடுங்காலத்திற்கு முன்னரே பயன்படுத்தியுள்ளமை பெரிதும் போற்றத்தக்கது.  BNF என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இம்முறைமையைப் பாணினி கடைப்பிடித்துள்ளதாகவும், ஆகவே சமற்கிருதம் உலக மொழிகளிலேயே கணினிப் பயன்பாட்டுக்குப் பெரிதும் உகந்தமொழி எனவும் மேலைநாட்டார் பாராட்டுவதைக் காண்கிறோம்.  [The Backus-Naur Form (Panini-Backus Form) or BNF grammars used to describe modern programming languages have significant similarities to Panini grammar rules] பாணினிக்கு முன்னரேயே தொல்காப்பியர் இத்தகு சீர்மையைத் தமது நூலில் பயன்படுத்தியுள்ளதை நாம் எடுத்துக்கூறத் தவறிவிட்டமையாலும், பாணினியை அவர்கள் உலகுக்கு முறையாக அறிமுகம் செய்தமையாலுமே, மேலைநாட்டார் கவனம் இங்குத் திரும்பவில்லை.  தொல்காப்ப்பியர் இலக்கண முறைமைகளைத் தொடுத்துக் கூறும் அல்லது அடுக்கி வைக்கும் பாங்கு தொன்மைமிக்க  தமிழின் இலக்கணச்சீர்மையை மட்டுமின்றி, நம் முன்னோரின் சிந்தனைப்போக்கின் முதிர்ச்சியையும் ஏரணவியலின் தொன்மையையும், அறிவியல் முறைமைப்படத் தரவுகளைத் தொகுத்து வழங்கும் ஆய்வுநெறிமுறைப் பயிற்சியையும் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.  தமிழைக் கணினிமொழி என்று பெருமிதத்துடன் கொண்டாடிக்கொள்ளத் தூண்டுவது எழுத்துப் படலம், சொற்படலம் ஆகிய இருபடலங்களின் அமைப்புமுறையேயாகும்.  இந்தச் சங்கிலித்தொடர்ச் செய்தித்தொகுப்பின் கட்டுக்கோப்பால்தான் இடைச்செருகல் விளையாட்டுகளை இவ்விரு படலங்களிலும் தொல்காப்பியத்தின் பின்வந்தோர் நிகழ்த்தமுடியவில்லை. இங்ஙனம் அமைந்துள்ள எழுத்துப்படலத்தில் இரு நூற்பாக்கள் வேற்றுமொழி இலக்கணநூலிலிருந்து இரவல் வாங்கப்படவேண்டிய தேவை என்ன?

‘தமிழ்மொழி, முண்டா, திராவிடம், ஆரியம் எனும் மூன்றினாலும் உருவாயது’ என்று வையாபுரிப்பிள்ளை கூறுகிறார் (History of Tamil language and literature, p. 5).  தமிழ்மொழியைத் திராவிடத்திற்கு அயலான ஒன்றாக வையாபுரியார் கருதுவது வியப்பையளிக்கிறது என்கிறார் பேராசிரியர்.  ‘தமிழையும் தமிழைச் சார்ந்த மொழிகளையும் திராவிடம் என்று அழைத்தலை அவர் மறந்துவிட்டார் போலும்’ (மே.ப. ப.177) என வியக்கும் பேராசிரியர், ‘ஒரயான் (Oraon) என்ற மொழி திராவிடக் குழுமொழிகளுள் திருத்தம் பெறாதனவற்றுள் ஒன்று என்று அறிஞர் கால்டுவெல் நிலைநாட்டி இருப்பதை அறியாது, அதனை முண்டா மொழி என்று அழைக்கிறார்’ (மே.ப. ப.178) என வையாபுரியாரின் வழுவைச் சுட்டுகிறார்.

இத் தவறான அணுகுமுறைக்குக் காரணமாக விளங்கும் நிலைப்பாட்டையும் பேராசிரியர் விளக்குகிறார்.  ‘மொழிநூல் ஆராய்ச்சியாளரில் சிலரும், வரலாற்று ஆராய்ச்சியாளரில் சிலரும், திராவிடர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறினர் என்றும், அவர்கட்கு முன்னர் இங்குவாழ்ந்த முண்டர்கள் அல்லது கொலேரியர்களை வென்றனர் என்றும் கூறுவது மரபாகிவிட்டது’ என்றுரைக்கும் பேராசிரியர் ‘திராவிடர்கள் (தமிழர்கள்) இந் நாட்டில் தோன்றியவர்களே என்பதும் இங்கிருந்துதான் வெளிநாடுகட்குச் சென்றனர் என்பதும் இற்றை ஆராய்ச்சியால் புலப்படும் உண்மையாகும்’ என அறுதியிட்டுரைக்கிறார் (மே.ப.).

Posted in Uncategorized | Leave a comment

செம்மொழி ஆய்வு வளர்ச்சியில் பேராசிரியர் சி. இலக்குவனாரின் பங்களிப்பு-பகுதி-1

செம்மொழி ஆய்வு வளர்ச்சியில்
பேராசிரியர் சி. இலக்குவனாரின் பங்களிப்பு-பகுதி-1

மறைமலை இலக்குவனார்
(மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் நடத்திய பேராசிரியர்.சி.இலக்குவனார் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கு-15/3/2010-மையக் கருத்துரை)
செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோற்றம் ஏனைய மொழிகளின் சார்பின்றியிருத்தலும் வேண்டும். என்கிறார் அமெரிக்கத் தமிழறிஞர் சார்சு கார்ட்டு (George Hart). ஒரு மொழியின் இலக்கியப்பழமையே அதனைச் செம்மொழியாகப் போற்றுதற்கு முதன்மைக் காரணம் எனக்கூறுவதுடன் சங்க இலக்கியங்களின் செழுமையையும் அவர் விரிவாக விளக்கித் தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பேறு வழங்குவது குறித்த ஆய்வு தேவையற்றது என்கிறார்.
தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பேறு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி அவர் விடுத்த அறிக்கையில், மலைகளில் மாணப்பெரியது இமயமலை என்பது போன்றும் இந்து சமயம் இந்தியாவின் மிகப் பெரும் சமயம் என்பதுபோன்றும் ‘தமிழ் செம்மொழி’ என்பது வெளிப்படையான உண்மை என்பதைச் சுட்டிக் காட்டியதுடன் இதற்காக ஒரு வேண்டுகோளோ போராட்டமோ தேவைப்படுவது அரசியற்சூழலையே காட்டுகிறது என அவர் வருத்ததுடன் தெரிவித்தார்.
செம்மொழித் தகுதிப்பேறு வழங்குதற்குத் தேவையான பண்புகளாக இந்திய அரசு அமைத்த வல்லுநர் குழு பின்வருவனவற்றை வலியுறுத்தியது.
1. மிகப்பழமையான நூல்களை அதாவது 1500 முதல் 2000 ஆண்டுகள் வரை நூல்கள் பதிவுபெற்ற வரலாறு
2. அம்மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினரின் அரிய பண்பாட்டு வழிமுறை உடையதாகக் கருதும் இலக்கிய நூல்கள்.
3. அம்மொழிக்கே உரியதாகவும் , மற்ற மொழிக் குடும்பத்தினரிடமிருந்து கடன்பெறாததுமான இலக்கிய வழிமுறை
இந்த அளவைகள் பின்னர் நெகிழ்ச்சியுற்றதையே நடைமுறைகள் காட்டுகின்றன. தெலுங்கு மொழிக்கும் கன்னட மொழிக்கும் செம்மொழிப் பீடத்தில் அரியணைகள் வழங்கப்பெறுதற்கே இத்தகைய தளர்வுகளும் தடுமாற்றமும் தோன்றின. எனினும் அவை குறித்த ஆய்வு இக் கட்டுரையின் நோக்கிற்குட்பட்டதன்று.
செம்மொழித் தகுதிப்பேற்றுக்குரிய வகையில் தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைப் பண்பு, பண்பாட்டுக் கலையறிவுப் பட்டறிவு வெளிப்பாடு, பிறமொழித் தாக்கமில்லாப் பண்பு, இலக்கிய வளம், உயர் சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை, மொழிக் கோட்பாடு ஆகிய சீரிய பண்புகள் தமிழுக்கு அமைந்திருப்பதை எடுத்துக்காட்டி சான் சாமுவேல், மணவை முச்தபா, வா. செ. குழந்தைசாமி , மலையமான் முதலிய அறிஞர்கள் பலரும் நூல்கள் எழுதியுள்ளனர். அவையனைத்தும் விரித்துரைக்கப் புகுந்தால் நெடிய வரலாறாக விரிந்துவிடும். .
செம்மொழி ஆய்வுவளர்ச்சியில் பேராசிரியர் சி. இலக்குவனாரின் பங்களிப்பு இக் கட்டுரையின் கருப்பொருளாகும்.
தமிழ் செம்மொழி என்னும் தகுதிப்பேறுக்குரிய அனைத்துச் சீரிய
பண்புகளும் பெற்றிலங்குவதனை விளக்கியும் அதற்கேற்ப உரிய உயர்வு வழங்கப் பெறாமலிருப்பதைச் சுட்டிக்காட்டியும் பேராசிரியர் எழுதிய ‘பழந்தமிழ்’ என்னும் நூல் இங்கு முதன்மையாகக் குறிப்பிடத்தக்கதாகும். மொழியியலாளர் ‘மூலத்திராவிடம்’ என்னும் கற்பித மொழி ஒன்றனைச் சுட்டி, அதன் வழிப்பட்டனவாகத் தமிழ் மொழியையும் ஏனைத் திராவிட- மொழிகளையும் குறிப்பிட்டுவந்தனர். பேராசிரியர், அந்த மூலத்திராவிடம் என்னும் பெயரை அகற்றிப் ‘பழந்தமிழ்’ என்னும் பெயரை வழங்கினார்
திராவிடமொழிகள் அனைத்தும் ஒரு மூலமொழியிலிருந்து பிறந்து வளர்ந்தவைகளாகும். மொழிக்குடும்பம் என்பது தொல் மொழி (Proto- language) ஒன்றிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடத்தாலும் வெவ்வேறு மாற்றமடைந்து ஒரு பிரிவு மொழியும் மற்றொரு பிரிவு மொழியும் வெவ்வேறு மொழியெனக் கருதும் பல மொழிகளின் தொகுதியாகும்.
இம் மொழிகளை இனமொழிகள் (Cognate languages) என்பர். இம்மொழிகளை ஒப்பிட்டு ஆராய்ந்து அவையனைத்தும் தொல்மொழி ஒன்றிலிருந்து பல்வேறு மொழிகளாகக் கிளைத்திருக்க வேண்டும் என ஒப்பியல் ஆய்வு மொழி -யாளர்கள் கூறுவர். எல்லாத் திராவிடமொழிகளுக்கும் மூலமாக இருந்த மொழியினை மூலத் திராவிட மொழி அல்லது தொல்திராவிடமொழி (Proto-Dravidian language) என வழங்கினர். (தமிழ் மொழி வரலாறு – சு. சக்திவேல் – ப. 52. இயல் 3 – தொல் திராவிடமொழியும் தமிழும்) என்னும் கூற்று இக் கருத்துக்குழுவினரின் ஆய்வுநெறிக்குத் தக்க எடுத்துக் காட்டாகும்.
‘இன்று திராவிட மொழிகள் என்பனவெல்லாம் பழந்தமிழிலிருந்தே தோன்றியனவாம். இத் திராவிடமொழிகள் பழந்தமிழின் புதல்விகளே. தாய் என்றும் மகள் என்றும் உறவு கற்பித்து உருவகப்படுத்திக் கூறுவதைச் சிலர் விரும்பிலர். ஏனைய திராவிட மொழியாளரில் சிலர் தத்தம் மொழியே தாயெனத் தகும் என்றும் சாற்றுவர். ஆதலின் தாய், மகள் எனக் கற்பித்துக் கூறும் உறவுமுறையைக் கருதாது உண்மைநிலையை ஆராயின், பழந்தமிழே பல மொழிகளாக உருவெடுத்துள்ளது என்று தெளியலாம். ஒன்று பலவாகியுள்ள உண்மைநிலையை மறைத்தல் இயலாது’ (பழந்தமிழ் – ப. 65) என்னும் பேராசிரியர் கருத்து, திராவிட மொழியியலாளரின் சிந்தனைக்குரியது.
‘திராவிடமொழியின் தொன்மையை நிலைநாட்டப் பேரளவில் பெறலாகும் துணையினைச் செந்தமிழே அளிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்’ என்னும் அறிஞர் கால்டுவெல் (திரா. ஒப். – ப. 106) கூற்றினையும் தம் கருத்துக்கு அரண்சேர்க்கும் வகையில் மேற்கோள் காட்டுகிறார்.
திராவிடமொழிகள் பன்னிரண்டையும் ஒப்பிட்டு ஆராய்ந்து இவையனைத்தும் ஒரு குழுவைச்சார்ந்தனவே எனத் திட்டவட்டமாக ஆய்ந்து நிறுவிய அறிஞர் கால்டுவெல் ‘பழந்தமிழ்தான் இவையனைத்துக்கும் தாயாகும் உரிமையும் சிறப்பும் உடையது என்பதை வெளிப்படையாகக் கூறினாரிலர்’ (பழந்தமிழ் – ப. 67) என வருந்தும் பேராசிரியர், ‘அவர் அவ்வாறு கூறாது போயினும், அவருடைய ஆராய்ச்சி ஏனைய திராவிட மொழிகள் தமிழின் புதல்விகளே என்பதை ஐயமுற நிலைநாட்டுகிறது’ (மே.ப.) எனப் புதியநோக்கில் ஒப்பிலக்கண நூலைக் காணும் வழிவகுக்கிறார். கால்டுவெல் வழங்கிய தரவுகளை அடிப்படையாகக் கொண்டே ‘தமிழ்க்குடும்ப. மொழிகள் பழந்தமிழிலிருந்து கிளைத்தெழுந்தன’ என்னும் தமது கருதுகோளை நிறுவுகிறார்.
‘எம்மொழியிலிருந்தும் கடன்பெறாச் செம்மொழி தமிழ்’ என்று நிறுவும் இலக்குவனாரின் முயற்சி செம்மொழி ஆய்வுநெறியின் தலையாய அணுகுமுறையாக விளங்குகிறது. ‘எம்மொழியிலும் விரைவில் மாற்றங்கொள்ளாதன இடப்பெயர்கள், வேற்றுமையுருபுகள், வினைவிகுதிகள், எண்கள் முதலியனவாம். இவை அமைந்துள்ள இயல்பினை நோக்கினால் தமிழே திராவிடமொழிகளின் தாய் எனத் தெள்ளிதின் அறியலாகும்’ (மே.ப. ப.68) எனத் தமது ஆய்வுமுறையைக் கூறி அவ்வழிநின்றே தமது கருதுகோளைச் செவ்விதின் நிறுவுகிறார்.

தொல்காப்பியர்காலத்தமிழுக்கும் திருவள்ளுவர்காலத்தமிழுக்கும் இடையே நிலவிய சில வேற்றுமைகளைப் பட்டியலிடுகிறார் (மே.ப. ப.139-140). ‘அடிப்படையில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டிலது. விகுதிகள், உருபுகள், இடைநிலைகள், சொற்கள் புதியனவாகத் தோன்றியுள்ளன. பழையன புதிய பொருள்கள் பெற்றுள்ளன’ என்று இவற்றைச் சுருக்கமாகத் தொகுத்துரைத்து, இவ்விருவர் கால இடைவேளை ஆறு நூற்றாண்டுகள் என்பதையும் சுட்டி ‘ஆறு நூற்றாண்டுகட்குள் மேலைநாட்டு மொழிகளில் பல அடைந்துள்ள மாற்றங்களோடு தமிழ்மொழி அடைந்துள்ள மாற்றங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ்மொழி மாற்றமே அடையவில்லை என்று கூறிவிடலாம்’ (மே.ப. ப.139-140) என அறுதியிட்டுரைக்கிறார்.
இக்கருத்தை வரலாற்றுப்பின்புலத்துடன் ஆய்வோர், மாற்றார் படையெடுப்பும் வேற்றவர் குடிப்பெயர்வும் காணப்படாச் சமூகவரலாற்றுப் பின்புலம் இந்த ஆறு நூற்றாண்டுகளில் (கி.மு. 7-ஆம் நூற்றாண்டு முதல் கி. மு. முதல் நூற்றாண்டு வரை) நிலவுவதைக் காண்பர். ஒருமொழி மாற்றம் அடைவதற்குரிய சூழல் நிலவாதவேளையில், பேராசிரியர் முடிபு மிகப் பொருத்தமாகவே அமைந்துள்ளமையையும் தெளிவர்.
செம்மொழித் தகுதிப்பேறு வழங்குதற்குத் தேவையான கூறுகளில் முதன்மை வாய்ந்த ஒன்றாக இந்திய அரசு வலியுறுத்திய ‘மிகப்பழமையான நூல்களை, அதாவது 1500 முதல் 2000 ஆண்டுகள் வரை நூல்கள் பதிவுபெற்ற வரலாறு’ பற்றிக் கூறுதற்குச் சங்க இலக்கிய வரலாறும் சங்கஇலக்கியச் சால்பும் அமைந்துள்ளன எனினும், ‘ஆரியச் செல்வாக்குக்குட்படாத பழைய இலக்கியம் எதனையும் நாம் தமிழ்மொழியில் பெற்றிலோம்’ எனும் நீலகண்ட சாத்திரியாரின் பொருந்தாக்கூற்றை வன்மையாக மறுக்கிறார் பேராசிரியர்.
சங்கப்புலவர்கள் 473 பேரில் 276 பேர் ஆரியர் வருகைக்கு முற்பட்ட புலவர்கள் என்பது பேராசிரியர்தம் துணிபு. இவருள் இயற்பெயர் அறியப்பட்ட 268 பேரின் பட்டியலை வழங்கி இவர்களனைவரும் ஆரியர் வருகைக்கு முற்பட்ட தமிழ்ப்புலவர்கள் என அறுதியிட்டுரைக்கிறார் (மே.ப. ப.109) இவர்களுள், முதுவெங்கண்ணனார், வெண்பூதியார், வெறிபாடிய காமக்கண்ணியார் ஆகிய மூன்று புலவர்களும் தொல்காப்பியர் காலத்துக்குப் பிற்பட்டவராயிருத்தல் கூடும் என்னும் தமது கருத்தையும் தெரிவிக்கிறார் (மே.ப. ப.109). இங்ஙனம் வரையறை செய்தற்குப் பேராசிரியர்க்குத் துணைபயந்தவை அகச் சான்றுகளேயாம். சொற்றொடரமைப்பு, இலக்கணப்போக்கு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தெரிவிக்கும் இக்கருதுகோள்கள் வரலாற்-றாய்வாளர்தம் தொடர்ந்த ஆய்வால் நிலைநிறுத்தப்பெறுமாயின், தமிழ்நாட்டுவரலாறு மேலும் தெளிவடையும்.
தாய்மொழிப்பற்று மேலோங்கியநிலையில் பேராசிரியர் இத்தகைய கருதுகோள்களை முன்வைத்ததாகக் கருதிவிடமுடியாது. வரலாற்றுச் சான்றுகள் இல்லாதநிலையில், இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு கருதுகோள்களை முன்வைக்கும் ஆய்வுநெறியை வடமொழியிலும் காண்கிறோம்.
திருஞானசம்பந்தரைத் ‘திராவிட சிசு’ எனப் பாடிய சங்கரரின் காலம் கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு எனச் சமற்கிருத ஆய்வாளர் கூறுவதனை அட்டியின்றி ஏற்கும் ஆய்வுலகு, இலக்கியச் சான்றுகளையும் இலக்கண அமைப்பையும் அடிப்படையாகக் கொண்டு தமிழறிஞர்கள் கூறும் கருத்துகளை – அவை கருதுகோள் நிலையில் முன்மொழியப்பட்டாலும் – ஏற்பதில்லை என்பது கசப்பான உண்மை.
இலக்கியங்கள் தமதுகாலச் சமூகச்சூழலை நேரடியாகவோ, மறை- முகமாகவோ, சிலவேளை எதி9ர்முகமாகவோ காட்டுவன என்பதால் இலக்கியங்களிலிருந்து சமூகஞ்சார்ந்த தரவுகளைப் பெறமுடியும் என்பதும், ஒரு நாட்டின் இலக்கியங்களைப் புறக்கணித்து விட்டு அந்நாட்டின் சமூகச்சூழலை அறிந்துவிடமுடியாது என்பதும் இன்றைய திறனாய்வு வளர்ச்சிப்போக்கு நமக்குக் கற்பிக்கும் பாடம் எனலாம்.
வளர்ச்சியடைந்துவரும் மொழிப்போக்கில் எத்தகைய மொழிப்போக்கு அல்லது மொழியியலமைப்பை ஒரு நூல் பெற்றுள்ளது என்பதனைக் கொண்டு, இலக்கிய வரலாற்றில் ஓர் இலக்கியத்தின் இடத்தை மதிப்பிடமுடியும்ஆயின், இத்தகைய மொழியியல் ஆய்வு முழுமையான பார்வையுடையதாக இருத்தல் வேண்டும். மறைமலையடிகள், நாவலர் பாரதியார் ஆகியோரின் பாடல்களின் மொழியமைப்பைக் கொண்டு அவை சங்ககாலத்தன என மயங்கும் நிலையும் ஏற்படலாம். எனினும் அப்பாடலகளில் பயின்றுவரும் சொற்கள், அப்பாடல்கள் உரைக்கும் சமூகச்சூழல் ஆகியவை அவற்றின் காலச்சூழலைக் கணித்தறியத் துணைநிற்கும். எனவே சமூகவியல், மொழியியல் ஆகிய இரு அறிதுறைகளையும் ஒருசேரத் துணைக்கொண்டு ஆய்வுநிகழ்த்துவோர் புதிய தரவுகளைப் பெறவியலும் என்னும் அவர்தம் ஆய்வுமுறையியல் பழைய ஐயங்களைப் போக்கிப் புதிய கருதுகோள்களை நிறுவ வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய அறிவியற்பாங்கான ஆய்வுமுறையியலையே பேராசிரியர் பின்பற்றி வருகிறார் என்பதனை அவர்தம் நூல்கள் காட்டுகின்றன.
–தொடரும்

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Posted in Uncategorized | 1 Comment